Friday, June 15, 2012

நினைவுகளால் ...



கடந்து போன சம்பவத்தை , உறவுகள் நினைத்து நிகழ்காலத்தில் ஏங்க வைப்பது நினைவுகள். ஒரு மனிதனை வருத்தபட வைக்க , ஏங்க வைக்க , அழ வைக்க , தோற்கடிக்க , சந்தோச பட வைக்க , நல்லவனாக்க , கெட்டவனாக்க என அத்தனையும் நினைவுகளால் செய்ய வைக்க முடியும். கடந்த காலத்தின் வியப்பை கூட்டுவதும் நினைவுகள். ஒரு சமயம் என்னுடைய பாட்டி யிடம் ஒரு புகைப்படத்தை காட்டி இவர் யார் ? என்று கேட்டேன், "என்னுடைய தம்பி , சிறு வயதில் அணையில் நீச்சல் தெரியாம குளிக்க போய் இறந்துட்டான் " என்று சொல்லி அன்று இரவு முழுக்க அழுது கொண்டே இருந்தார். கடையில் புகையிலை வாங்கும் தாத்தாக்களை பார்த்தால் எனக்கு முகம் காட்டாத என் தாத்தாவின் நினைவு என்னை சாகடிக்கிறது. ஒரு நினைவு எத்தனை நாட்களை தாண்டி வந்திருக்கிறது. சுந்தர ராமசாமி அவர்களின் ஜே.ஜே. சில குறிப்புக்கள் படித்திருக்கிறார்களா ? ஜே.ஜே வின் ஒரு நாள்குறிப்பில் ஒரு தச்சனின் உளியின் சப்தத்தை கேட்டு , தச்சரான அவரது தந்தை நினைவு வருவதாக அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.
பேச்சு , செயல் , வாசனை என உலகத்தில் எந்தவொரு செயலாலும் பொருளும் ஒருவரின் நினைவை தூண்டிவிடும். தன் காதலியின் நினைவு வருவதாக தன் பேக்கில் பவுடரை கொட்டிக்கொள்ளும் நாயகன் ( கற்றது தமிழ் ) . தன் அம்மாவின் செயல்களை போல் செய்யும் நாயகன் தன் அம்மாவின் நினைவுகளால் காதல் வயப்படும் நாயகி
( கருப்புச்சாமி குத்தகைதாரர் ) என நினைவுகள் வெளிப்படும் காட்சி சினிமாவில் அற்புதமானவை. மற்ற திரைக்காவியங்களின் நினைவுகள் என் நினைவுக்கு எட்ட வில்லை. ஒரு மனிதன் எவ்வளவு பெரிய , சுகவாசியாக இருந்தாலும் , கடந்த கால நினைவுகள் வந்தால் அவனும் இழந்தவன் தான். நினைவுகளை கருத்தில் கொண்டு மனிதனுக்கு இயல்பில் ஒரு எதிர்மறை மின்னணு இயந்திரங்கள், தனது ஞபாகத்தில் இருப்பதை நொடிபொழுதில் அழிக்க முடியும் . ஆனால் மனிதனின் ஞாபகத்தை அழிப்பதை அவ்வளவு எளிதல்ல. அவனுக்கு வேண்டாத நினைவுகளை அழிக்க அவன் எதைஎதையோ தேடி போகிறான். மது அதிக நபர்கள் விரும்பும் உடனடி தீர்வாகும். மனிதன் நினைவுகளுக்கு அடிமையென்றால் , நினைவு காலத்திற்கு அடிமை. ஒவ்வோரு மனிதனின் சொல்லபடாத நினைவுகளை காலத்தால் அழிக்க படுகின்றன. 20 வயதை தாண்டும் முன்னே எனக்கு ஏற்பட்ட மூன்று காதல் , நட்பு , பால்யம் என நினைவுகள் இப்போது என்னை அழுத்தமாக பாதிக்கின்றது. என்றோ அர்த்தம் புரிந்தோ புரியமால் நான் எழுதிய இந்த கவிதை இப்போது நினைவில் உதிக்கிறது.

*
நீ
குடிப்பெயரும்போது
வாங்கமால் விட்டுச்சென்ற இசை தட்டை
நான்
இப்பொழுதெல்லாம்
கேட்பதில்லை.
ஏனென்றால் , மெல்ல இசையோட்டத்தால்
உன் நினைவுகளால் நான் அழுது விடுகிறேன்.
*

No comments:

Post a Comment